ரவீந்திர ஜடேஜா மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஆஸ்திரேலியாவின் லபுசாக்னே அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியா டாப் பேட்ஸ்மேன்களை தனது சுழலில் சுருட்டி எடுத்துள்ளார். 22 ஓவர்கள் வீசிய ஜடேஜா 8 மெய்டன் ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் சதம் மற்றும் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 400 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான டாட் மர்ஃபி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி ஆஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோரது சிறப்பான பந்துவீச்சின் மூலம் 91 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என கலக்கிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா செய்த ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த போது ஜடேஜா பந்துவீச வந்தார். அப்போது பந்து வீசும் முன் திடீரென முகமது சிராஜிடம் சென்ற ஜடேஜா, அவரின் கைகளில் இருந்து ஏதோ ஒரு திரவியத்தை எடுத்து தனது விரல்களில் பூசிக்கொண்டார்.
இடதுகை பவுலரான ஜடேஜா எந்தெந்த விரல்களில் பந்தை டேர்ன் செய்கிறாரோ அங்கு மட்டும் அதனை தடவிக்கொண்டார். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது. ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி பந்தை சேதப்படுத்தினாரா என்ற கோணத்தில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்தன.
இதற்கு இந்திய அணி தரப்பில் பதிலும் அளிக்கப்பட்டது. அதாவது முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர் ஜடேஜா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை போட்டி நடுவர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். காணொளியும் பார்க்கப்பட்டுள்ளது. அப்போது ஜடேஜா கையில் தடவியது ஒரு வகையான வலி நிவாரண மருந்து தான் என்றும், விதிகளை எதுவும் மீறவில்லை என்றும் இந்திய அணி தரப்பில் கூறப்பட்டது.
இருப்பினும் அவர் நடுவரிடம் தெரிவிக்காமல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் அவருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐசிசி விதிகளை மீறி கள நடுவரிடம் கூறாமல் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் இந்திய அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 25% சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலுல் ரவீந்திர ஜடேஜா தனது தவறை ஒப்புக்கொண்டதின் காரணமாக அவர் மேற்படி விசாரணைக்கு வரதேவையில்லை என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.