உலக கிரிக்கெட் அடுத்த நட்சத்திர பேட்ஸ்மேன் யார்? - இந்திய வீரரை தேர்வு செய்த ஜேசன் ராய்!
விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் என நட்சத்திர வீரர்களை தாண்டி, அடுத்த கட்டத்திற்கு புதிய நட்சத்திரங்களை தேடும் இடத்தில் தற்கால கிரிக்கெட் காலக்கட்டம் இருக்கிறது. பாகிஸ்தானின் பாபர் ஆசாம் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் எதிர்கால உலக கிரிக்கெட் நட்சத்திரங்களாக இந்தியாவிற்கு வெளியே பார்க்கப்படுகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் எடுத்துக் கொண்டால் எக்கச்சக்கமான இளம் திறமைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். கடைசியாக சாய் சுதர்சன் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போதைய இந்திய அணியில் இளம் வீரர்களில் நட்சத்திர வீரர்களாக சுப்மன் கில், ருதுராஜ், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் பார்க்கப்படுகிறார்கள்.
மேலும் இந்தக் கூட்டணி அடுத்த ஏழு முதல் 10 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடும் என்றும் கணிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து உலக கிரிக்கெட் நட்சத்திரமாக இந்த வீரர்களில் இருந்துதான் ஒரு வீரர் உருவாகி வருவார் என்பது நிதர்சனம். இதில் இல்லாத ஒரு வீரர் இந்தியாவில் இருந்து வருவார் என்றால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய நல்ல செய்தியாகவும் அமையும்.
இந்த நிலையில் தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 லீக்கில் சென்னை பிரேவ்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயிடம் அடுத்த உலக கிரிக்கெட் நட்சத்திர பேட்ஸ்மேன் யார்? என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜேசன் ராய் கொஞ்சமும் யோசிக்காமல் ஷுப்மன் கில் பெயரை கூறினார்.
அவருடைய இந்த பதில் எல்லோருக்கும் ஆச்சரியத்தையே உண்டாக்கி இருக்கிறது. ஏனென்றால் அவர் இங்கிலாந்தின் ஹாரி புரூக் பெயரை கூறவில்லை. அவர்தான் கில்லுக்கு முன்பாக உலக கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக வருவார் என்று கணிக்கப்பட்டவர். அவருக்குப் பிறகு சிறிது காலத்தில் கில் மிக வேகமாக விளையாட ஆரம்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.