ENG vs IND: பவுலராக என் பணியை நான் சிறப்பாக செய்ய வேண்டும் - ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Fri, Jul 01 2022 13:31 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பும்ராவுக்கு இதற்கு முன்பு கேப்டனாக இருந்த பெரிய அனுபவம் இல்லை. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பீந்துவீச்சாளர்களுக்கு ஃபில்டர்களை எங்கு நிறுத்த வேண்டும் என்று தெரியும்.

இதனால், பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு பெரும் கஷ்டமாக இருக்காது. இந்த நிலையில், கேப்டன் ஆன பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பும்ரா, “இது என் வாழ்நாளில் மிக பெரிய பெருமையான தருணமாக நினைக்கிறேன். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது தான் என் கனவு. ஆனால் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பு சந்தோசமாக இருக்கிறது.

இந்த செய்தியை அறிந்ததும் என் குடும்ப உறுப்பினர்களுக்கு தொலைப்பேசி மூலம் தகவல் அளித்து சந்தோசத்தை பகிர்ந்து கொண்டேன். ரோஹித் சர்மா அணியில் இல்லாதது மிக பெரிய பின்னடைவு தான். அணியின் காம்பினேஷன் குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். பிளேயிங் லெவன் குறித்து நீங்கள் அறிய டாஸ் போடும் போது வரை காத்திருங்கள்.

இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டதற்கு முன் அவர் கேப்டனாக எந்த போட்டியிலும் செயல்படவில்லை. ஆனால் இந்தியாவின் தலைச் சிறந்த கேப்டனாக தோனி இருந்தார். தோனி, கோலி, ரோஹித் எல்லாம் இந்திய கிரிக்கெட்டிற்கு அவ்வளவு பெரிய தூண்களாக இருந்துள்ளனர். அவர்களிடம் நிறைய கற்று கொண்டு இருக்கிறேன்.

கேப்டன் ஆன பிறகு எனக்கு ஏதும் மாறவில்லை. பவுலராக என் பணியை நான் சிறப்பாக செய்ய வேண்டும். என் முழு திறனை வெளிப்படுத்தி அணியை ஒருங்கிணைக்க முயற்சி செய்வேன். எங்களுக்கு அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பும்ரா 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை