ஐபிஎல் 2022: ஜஸ்ப்ரித் பும்ராவை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஐபிஎல் 15ஆவது சீசன் 56ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா ஆகியோர் தலா 43 ரன்களை சேர்த்தார்கள். அடுத்து அஜிங்கிய ரஹானே 25 (24), ரிங்கு சிங் 23 (19) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 165/9 ரன்களை எடுத்தது. ஜஸ்ப்ரித் பும்ரா 5/10 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இலக்கை துரத்திக் களமிறங்கிய மும்பை அணியில் இஷான் கிஷன் 51 (43) மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார். மற்றவர்களில் ஒருவர்கூட 15+ ரன்களை கடக்கவில்லை. ரோஹித் ஷர்மா உட்பட 7 பேர் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே சேர்த்தார்கள். இதனால், மும்பை அணி 17.3 ஓவர்கள் முடிவில் 113/10 ரன்களை மட்டும் எடுத்து, 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இப்போட்டியில் தோற்ற பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, தோல்விக்கான காரணம் குறித்து வெளிப்படையாக பேசினார். அதில் அவர் ‘‘கொல்கத்தாவை 165 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது சிறந்த விஷயம்தான். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. பேட்டர்கள்தான் சரியில்லை. எதிர்பார்த்த அளவுக்கு அவர்கள் விளையாடவில்லை. பேட்டிங் செய்ய கஷ்டமான பிட்சாக இது இல்லை.
4 போட்டிகள்வரை இந்த பிட்சில் விளையாடிவிட்டோம். இதனால், இங்கு எப்படி விளையாட வேண்டும் என்பது தெரிந்திருக்கும். பேட்டர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது தோல்விக்கு முக்கிய காரணம். எதிரணியை பாருங்கள். 10 ஓவர்களில் 100 ரன்களை அடித்துவிட்டார்கள். அதன்பிறகு பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டதால், கம்பேக் கொடுக்க முடிந்தது. பேட்டிங் துறை இந்த சீசன் முழுவதும் சிறப்பாக செயல்படவில்லை’’ எனத் தெரிவித்தார்.