ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகும் பும்ரா? அதிர்ச்சியில் உறைந்த மும்பை ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு பல்வேறு தொடரில் பங்கேற்காமல் இருந்தார். மேலும் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு அந்தத் தொடரில் இருந்து விலகினார். அதன் பிறகு பெங்களூருவில் முகாமிட்டு பயிற்சியை பும்ரா தொடங்கினார்.
ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை தொடரில் பும்ரா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் பும்ராவுக்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் அந்தத் தொடரில் இருந்தும் கடைசி நிமிடத்தில் விலகினார். பும்ராவை சரியாக கையாளாமல் முந்தைய தேர்வு குழு அவசரம் காட்டியதாக புகார் எழுந்தது.
இதன் காரணமாக பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பும்ரா பங்கேற்க முடியாமல் போய்விட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பும்ரா மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். அதாவது இந்திய அணிக்காக விளையாடும் போது பும்ரா காயம் என்று சொல்லி அமர்ந்து விடுவதாகவும், மும்பை அணிக்காக மட்டும் விளையாடுவதாகவும் ரசிகர்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பல்வேறு மீம்ஸுகளும் வெளிவந்தன. இந்த நிலையில் பும்ரா வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. பும்ராவின் காயம் நினைத்ததை விட அதிகமாக இருப்பதால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐயின் மருத்துவக் குழு அனுமதி வழங்கவில்லை. மேலும் பும்ராவும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்காக நேரடியாக விளையாட பும்ரா திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் தற்போது வெளியான தகவல்படி பும்ரா இங்கிலாந்தில் ஜூன் 7ஆம் தேதி நடைபெற உள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் விளையாட மாட்டார் என்ற கூறப்படுகிறது. பும்ரா காயம் குணமடைய மேலும் சில காலம் ஆகும் என்பதால், அவர் நேரடியாக செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பை ஒரு நாள் தொடரில் தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் மும்பை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் பும்ராவை நம்பி பல்வேறு பிளான்களை மும்பை அணி போட்டிருந்தது.
பும்ராவும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்சரும் இணைந்து கலக்குவார்கள் என ரசிகர்கள் நம்பினர். கடந்த ஆண்டு ஆர்ச்சர் காயம் காரணமாக விளையாடாத நிலையில், இந்த ஆண்டு பும்ரா அணியில் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. எனினும் மும்பை அணி பும்ராவை விளையாட வைக்க தீவிரம் காட்டி வருகிறது.