BAN vs IND: 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் உனாத்கட் சேர்ப்பு!

Updated: Sat, Dec 10 2022 12:18 IST
Jaydev Unadkat Replaces Mohammed Shami In Team India For Tests Against Bangladesh (Image Source: Google)

இந்திய அணியில் அறிமுகமாகி அதன்பின் காணாமல் போன வீரர்களில் ஏராளமானோர். அதில் ஜெய்தேவ் உனத்கட்டும் ஒருவர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக செஞ்சூரியனில் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர் ஜெய்தேவ் உனத்கட். அப்போது அவருக்கு வயது 19 தான். ஆனால் அதன் பிறகு டெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இதனால் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடும் அவர், உள்நாட்டு தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் அணியில் நிரந்த இடம் அவருக்கு கிடைக்கவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இவரை அணிகள் வாங்கின.

இதுவரை ஒரு டெஸ்ட், ஏழு ஒருநாள், 10 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதிலும் இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். மேலும் 2019-2020 ரஞ்சி தொடரில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்டிரா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தார்.

அதுமட்டுமின்று தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சௌராஷ்டிரா அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளார். 

வங்காளதேச அணிக்கெதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் முகமது சமி இடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போது அவர் காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு டெஸ்ட் அணியில் விளையாடி அதன்பின் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அணியில் இடம் கிடைத்துள்ளது. 

ஒருவேளை ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்தால் அறிமுக போட்டிக்குப்பின் 12 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். மேலும் நீண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு வாய்ப்பை பெற்ற இரண்டாவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையையும் பெறுவார்.

இதற்குமுன் இங்கிலாந்து அணியின் கரெத் பாட்டி 142 டெஸ்ட் போட்டிகள் இடைவேளையில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது உனாத்கட்டிற்கு பிளேயிங் லெவனின் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் 117 டெஸ்ட் போட்டிகள் இடைவேளையில் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை