WPL 2025: தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த ஜெஸ் ஜோனசன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதாலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியில் பாரதி ஃபுல்மாலில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களைச் சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மரிஸான் கேப், ஷிகா பாண்டே மற்றும் அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விலையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஷஃபாலி வர்மா - ஜெஸ் ஜோனசன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷஃபாலி வர்மா 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தா ஜெஸ் ஜோனசன் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெஸ் ஜோனசன் ஆட்டநாயகி விருதை வென்றார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் ஜேஸ் ஜோனசன் பேட்டிங்கில் 61 ரன்களையும் சேர்த்ததன் மூலம் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அதன்படி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பந்துவீச்சில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் பேட்டிங்கில் 50+ ஸ்கோரை பதிவுசெய்து அசத்திய நான்காவது வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் எல்லிஸ் பெர்ரி, யுபி வாரியர்ஸ் அணியின் தீப்தி சர்மா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.