SA20 League: சன்ரைசர்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது சூப்பர் கிங்ஸ்!

Updated: Sun, Feb 05 2023 21:40 IST
Joburg Super Kings win by 24 runs and knocks out MI cape Town of the SA20 league! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 119 ரன்களை குவித்தனர். ரீஸா ஹென்ரிக்ஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அரைசதம் அடித்து டூ பிளெசிஸ் ஒரு முனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆட, மறுமுனையில் மேத்யூ வேட்(7), ஃபெரீரா(2), ப்ளூய்(5), ரொமாரியோ ஷெஃபெர்ட் (2) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் மளமளவென ஆட்டமிழந்தனர். அபாரமாக விளையாடி 61 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்த டு பிளெசிஸ் 6 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். டு பிளெசிஸின் அபாரமான பேட்டிங்கால் 20 ஓவரில் 160 ரன்கள் அடித்தது ஜேஎஸ்கே அணி.

இதையடுத்து 161 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் தொடக்க வீரர் ரோஸிங்டன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோர்டான் ஹெர்மான்(5) மற்றும் ஜேஜே ஸ்மட்ஸ்(0) ஆகிய இருவரும் சொதப்பினர். 

பின்னர் ஆனால் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடிய டெம்பா பவுமா அரைசதம் அடித்தார். 34 பந்தில் பவுமா 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 5 ரன்னுக்கும், மார்கோ யான்சென் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர்.

மிடில் ஆர்டரில் நிலைத்து விளையாடி நம்பிக்கையளித்த கேப்டன் மார்க்ரம் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் சன்ரைசர்ஸ் அணியால் இலக்கை நோக்கி நகர முடியவில்லை. 20 ஓவரில் 136 ரன்கள் மட்டுமே அடித்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, 24 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸிடம் தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்திற்கு முன்னேறிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. பிரிட்டோரியா கேப்பிட்டள்ஸ் அணி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், 2ஆவது அணியாக ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது. இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை