சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - மார்க் டெய்லர்!

Updated: Mon, Jun 06 2022 14:32 IST
Image Source: Google

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி  சதமடித்தார். அத்துடன் அவரது 10,000 ரன்களையும் கடந்தார். இளம் வயதிலேயே அந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

சர்வதேச அளவில் இதுவரை 13 பேர் 10,000 ரன்களை கடந்துள்ளனர். ஜோ ரூட் இந்த வரிசையில் 14ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் இந்த இலக்கை அடையும் இரண்டாவது வீரர் இவரே. அலைஸ்டர் குக் முதலிடத்தில் இருக்கிறார். 

ஜோ ரூட் 118 போட்டிகளில் 10015 ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளில் 15921 ரன்கள் எடுத்ததுதான் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனயை ஜோ ரூட் முறியடிப்பாரென ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“ஜோ ரூட் இன்னும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும். அதனால் சச்சின் சாதனையை இவரால் எளிதாக முறியடிக்க முடியுமெனத் தோன்றுகிறது. 2, 3 வருடங்களாகவே இவரது பேட்டிங்கை கவனித்து வருகிறேன். அவருடைய கிரிக்கெட் வாழ்வில் உச்சநிலையில் இருக்கிறார். அவர் உடல்நலத்துடன் இருந்தால் 15000 ரன்களை எளிதாக அடைய முடியும்” என டெய்லர் கூறினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை