கேப்டன்சியிலிருந்து விலகினார் ஜோ ரூட்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துமுடிந்தது. இரு அணிகளுக்குமே ஆஷஸ் தொடர் என்பது உலக கோப்பை போல. எனவே இரு அணிகளும் ஆஷஸ் தொடரில் வெறித்தனமாக விளையாடும். ஆனால் இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுமட்டமாக விளையாடியது.
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது இங்கிலாந்து அணி. 3 போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே படுமோசமாக விளையாடியது. இந்த தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ஜோ ரூட் பேட்டிங்கில் தனி நபராக இங்கிலாந்துக்காக போராடுகிறார். அவர் பேட்டிங்கில் அசத்தினாலும், அவரது கேப்டன்சி மோசமாக உள்ளது. 2021ஆம் ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் ஓராண்டில் அதிகமான டெஸ்ட் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்தளவிற்கு படுமட்டமாக வேறு ஒரு அணி விளையாடி பார்த்ததில்லை என்று ரிக்கி பாண்டிங் விமர்சித்திருந்தார். ரூட்டின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்றும் கூறப்பட்டது.
ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் ஜோ ரூட் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார். விளைவு இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது.
மேலும் இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் தொடர்களில் 4-ல் தோல்வியைத் தழுவியும், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 எனப் பின்தங்கியுள்ளது. வெளிநாடுகளில் விளையாடிய மூன்று தொடர்களிலும் தோற்றுள்ளது (இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்).
சொந்த மண்ணில் விளையாடிய இரு தொடர்களிலும் இங்கிலாந்து அணியால் வெல்ல முடியவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து 9ஆம் இடத்தில் உள்ளது. ஒரு டெஸ்டில் மட்டும் வெற்றி பெற்று 7 டெஸ்டுகளில் தோற்றுள்ளது.
இதன் காரணமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் பதவியைப் பறிக்க வேண்டும், இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து கேப்டனாக இருக்க ரூட் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஜோ ரூட் "எனது நாட்டிற்கு கேப்டனாக இருந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் கடந்த ஐந்து வருடங்களை மகத்தான பெருமையுடன் திரும்பிப் பார்க்கிறேன். அந்த வேலையைச் செய்ததற்கும், இங்கிலாந்து கிரிக்கெட்டின் உச்சம் என்ன என்பதற்குப் பாதுகாவலராக இருந்ததற்கும் பெருமையாக இருக்கிறது.
எனது நாட்டை வழிநடத்துவதை நான் மிகவும் விரும்பினேன், ஆனால் அது எனக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது மற்றும் விளையாட்டில் இருந்து விலகியிருந்த என்னை அது ஏற்படுத்திய தாக்கத்தை சமீபகாலமாகத் தாக்கியது.
என்னுடன் வாழ்ந்து, அன்பு மற்றும் ஆதரவின் நம்பமுடியாத தூண்களாக இருந்த எனது குடும்பத்தினரான கேரி, ஆல்ஃபிரட் மற்றும் பெல்லா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். எனது பதவிக் காலத்தில் எனக்கு உதவிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் அனைவரும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பயணத்தில் அவர்களுடன் இருந்ததே பெரிய பாக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.