ஜோ ரூட்டின் பேட்டிங் வரிசை எது? - ஸ்டோக்ஸின் பதில்!

Updated: Sun, May 08 2022 18:48 IST
Image Source: Google

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவந்த ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றி மற்றும் 26 தோல்விகளை அடைந்தது. ஜோ ரூட்டின் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த இங்கிலாந்து அணி, கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக சொதப்பிவருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி, ஆஷஸ் தொடரை 0-4 என ஆஸ்திரேலியாவிடம் இழந்தது என படுதோல்விகளை அடைந்துவந்தது.

ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி  மட்டுமே பெற்றது. தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்வி அடைந்துவந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து ஜோ ரூட் அண்மையில் விலகினார். 

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் எந்தவரிசையில் களமிறங்குவார் என்பது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஸ்டோக்ஸ், "ரூட் அவர்கள் எந்த இடத்தில் களமிறங்கினாலும் நன்றாக விளையாடுவார். ஆனால் 4ஆவது இடம் அவருக்கு சிறப்பாக இருக்கும். தற்போதைய சராசரி 60ஆக இருந்தாலும் நான்காவது இடத்தில் விளையாடினால் சராசரி 90 ஆக மாறும். அவர் 4லும் நான் 6வது இடத்திலும் களமிறங்கினால் அணிக்கு வலுவாக இருக்கும் என்று கருதுகிறேன்" என தெரிவித்தார்.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணியுடன் வரும் ஜூன் 2இல் முதல் டெஸ்ட் விளையாட இருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை