பவுன்சர் வீசி பேட்டருக்கு ஷாக் கொடுத்த ஜோ ரூட்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷஃபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதன்பின் ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் மசூத் 151 ரன்னில் என வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சௌத் சகீல் 82 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் சதமடித்து அசத்தியதுடன் 104 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலிவுடன் இணைந்து கேப்டன் ஒல்லி போப் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் இப்போட்டியில் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஸாக் கிரௌலியுடன் இணைந்த ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
அதிரடியாக விளையாடிய கிராலி அரை சதம் விளாசினார். இதன்மூலம் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஸாக் கிரௌலி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில் இப்போட்டில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் தனது அபாரமான பவுன்சரின் மூலம் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி, இன்னிங்ஸி 149ஆவது ஓவரை ஜோ ரூட் வீச, அதனை பாகிஸ்தானின் அப்ரார் அஹ்மது எதிர்கொண்டார். அப்போது அந்த ஓவரின் கடைசி பந்தை ஜோ ரூட் பவுன்சராக வீச, அதனை சற்றும் எதிர்பாராத அப்ரார் அஹ்மத் ஸ்லிப்பில் நின்றிருந்த பென் டக்கெட்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். சுழற்பந்து வீச்சாளரான ஜோ ரூட் பவுன்சர் வீசியதுடன் அதில் விக்கெட்டையும் கைப்பற்றியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.