ஜோஃப்ரா ஆர்ச்சரை க்ளீன் போல்டாக்கிய ஸ்பென்சர் ஜான்சன் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று கௌகாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்ஸர் ஜான்சன் ரன்களை வாரிவழங்கிய நிலையிலும், ஜோஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். அதன்படி இன்னிங்ஸின் கடைசி ஓவரை ஸ்பென்ஸர் ஜான்சன் வீசிய நிலையில் அந்த ஓவரை எதிர்கொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு சிக்ஸர் உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வலுவான ஸ்கோரை நோக்கி அழைத்துச் செல்ல முயற்சி செய்தார்.
அப்போது அந்த ஓவரின் ஐந்தாவது பந்தையும் ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் பேட்டை சுழற்ற, அவரால் அந்த பந்தை சரியாக கணிக்க முடியாத காரணத்தால் பந்தை தவறவிட்டார். இதனால் அந்த பந்தானது அவரது ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால் இப்போட்டியில் 16 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
இப்போட்டி குறித்து பேசினால், இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துருவ் ஜூரேல் 33 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் தலா 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் மொயீன் அலி 5 ரன்னிலும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 18 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 8 பவுண்டரி 6 சிக்ஸர்கள் என 97 ரன்களையும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 22 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.