ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் ஸத்ரான் ஆபாரமான சதத்தை பதிவுசெய்ய, முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைக் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஸத்ரான் 177 ரன்களையும், ஒமர்ஸாய் 41 ரன்களையும், நபி 40 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜோஃப்ரா ஆர்ச்சர், இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனையை ஜோஃப்ரா ஆர்ச்சர் முறியடித்துள்ளார்.
முன்னதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், தற்போது ஆர்ச்சர் 30 இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் அந்த அணியின் மற்றொரு முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் 32 இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், அதில் ரஷித், மார்க் வுட்
Also Read: Funding To Save Test Cricket
ஆஃப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), அஸ்மதுல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷித் கான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபாருக்கி.