ஜானதன் டிராட்டின் பதவிக்காலத்தை நீட்டித்தது ஆஃப்கானிஸ்தான்!
சமீப காலங்களில் ஆஃப்கானிஸ்தான் அணியானது சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 9ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
மேலும், ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் அறிமுக வீரர் ஸுபைத் அக்பாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து தர்விஷ் ரசூலியும் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த முஜீப் உர் ரஹ்மனுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தன் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட்டின் பதவிக்காலத்தை நீட்டிப்பதாக ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் இறுதிவரை அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்பட்டுள்ள்து. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “கடந்த 2.5 ஆண்டுகளில் அவர் அணியின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ததன் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
ஜானதன் டிராட் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி பல வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை குவித்துள்ளது. இதில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை, ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பதிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.