இனி பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் - ஜோஸ் பட்லர்!
உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடர் தோல்வியால் முதல் அணியாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் தட்டு தடுமாறி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறும். இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஜாஸ் பட்லர் இனிவரும் காலத்தில் இங்கிலாந்து ஒரு நாள் அணியை கட்டமைக்கும் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எங்களுடைய புதிய அணியில் பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அந்த வீரர்கள் எல்லாம் தங்களுடைய வாய்ப்பு நோக்கி காத்திருக்கிறார்கள். எங்கள் அணியில் இருக்கும் சில வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அவ்வளவாக விளையாடுவதில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் நிச்சயம் இருக்கிறது. இதனால் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதிதல்ல.எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்து வீச வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புதிய தொடக்க வீரராக பில் சால்ட் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் களமிறங்க உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பயிற்சி முகாமில் நாங்கள் பல விஷயங்கள் குறித்து ஆராய்ந்தோம். உலகக்கோப்பை தொடர் எங்களுக்கு மோசமாக அமைந்தது. எங்கள் அணியில் திறமை வாய்ந்த பல வீரர்கள் இருக்கிறார்கள் நிச்சயமாக இங்கிலாந்து ஒருநாள் அணி புதிய வடிவம் பெறும். அதற்கு நான் துணையாக இருப்பேன்.
அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டு உத்வேகத்துடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி எங்கு இருந்ததோ அதை நோக்கி நாங்கள் மீண்டும் செல்ல உள்ளோம். முதலில் என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தில் நான் கவனம் செலுத்தி பல விஷயங்கள் குறித்து கற்றுக் கொள்ள உள்ளேன். ஒரு மோசமான தொடர் எங்களை யார் என்று விவரிக்காது. அந்த தொடர் மூலம் அடைந்த தோல்வியை ஒரு உத்வேகமாகவும் எண்ணி எங்கள் அணியை புதிய பாதை நோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன்.
நடந்து முடிந்ததை பாசிட்டிவ் ஆக மாற்றி எஞ்சியுள்ள கிரிக்கெட் வாழ்க்கையை செம்மையாக மாற்ற விரும்புகிறேன். 2019 உலகக்கோப்பை தொடரின் போது நான் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆச்சரிடம் இதைதான் சொன்னேன். இந்த சூப்பர் ஓவரில் நாம் தோல்வி அடைந்தாலும் அது உங்களை யார் என்று விவரிக்காது என்றேன். அதை தான் இப்போதும் சொல்கிறேன்.
உலககோப்பை தொடரில் நாங்கள் அடைந்த தோல்வியின் மூலம் அது யார் என்று எங்களை விவரிக்காது. கிரிக்கெட் குறித்து நல்ல கண்ணோட்டம் எனக்கு இருக்கிறது. என் வீட்டில் குழந்தைகள் நான் உலக கோப்பையில் அடைந்த தோல்வி குறித்து எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஏமாற்றம் இருக்கலாம், ஆனால் அடுத்த சவாலை நோக்கி நாம் செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.