சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இரு அணிகளும் இத்தொடரை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனியை முந்தும் வாய்ப்பு
இதுவரை, ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணிக்காக மூன்று வடிவங்களிலும் சேர்த்து 372 போட்டிகளில் 377 இன்னிங்ஸ்களில் விளையாடிய நிலையில் அதில் 355 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்நிலையில் இத்தொடரில் அவர் மேற்கொண்டு ஐந்து சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை முந்தி ஆறாவது இடத்தைப் பிடிப்பார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 538 போட்டிகளில் 526 இன்னிங்ஸ்களில் விளையாடி 359 சிக்ஸர்களை அடித்து தற்போது அதிக சிஸ்கர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் தோனியைத் தவிர, ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், ஷாஹித் அஃப்ரிடி, பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் மார்ட்டின் கப்தில் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பால் காலிங்வுட்டை பின் தள்ளும் வாய்ப்பு
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 181 ஒருநாள் போட்டிகளில் 154 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜோஸ் பட்லர் அதில் 39.54 சராசரியுடன் 5022 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய தொடரில் அவர் மேற்கொண்டு 71 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் அந்த அணியின் முன்னாள் வீரர் பால் காலிங்வுட்டை முந்தி ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த 4ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இங்கிலாந்திற்காக 197 போட்டிகளில் 181 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பால் காலிங்வுட் 35.36 சராசரியுடன் 5092 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஸ் பட்லர், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத், மார்க் வுட்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.