தமிழக பந்துவீச்சாளர்களை பந்தாடிய ஜோஸ் பட்லர்; வைரல் காணொளி!

Updated: Sun, Apr 02 2023 16:45 IST
Jos Buttler Smashed 4 Fours Against T Natarajan Over Srh Vs Rr Ipl 2023 (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் - பட்லர் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டவுன் தி டிராக் வந்து அடிக்க முயன்றார். ஆனால் அது பேடில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதன்பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் என்று விளாச ராஜஸ்தான் அணி மூன்றே ஓவர்களில் 37 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் புவனேஷ்வர் குமார், ரன்ரேட்டை கட்டுப்படுத்த வாஷிங்டன் சுந்தரை அழைத்து வந்தார். பவர்பிளே ஓவர்களில் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக வீசுவார் என்பதால், ரன் ரேட்டை கட்டுப்படுத்துவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் பந்திலேயே பட்லர் சிக்சர் விளாச, மீண்டும் 2ஆவது பந்திலும் சிக்சர் சென்றது. தொடர்ந்து அந்த ஓவரில் மொத்தமாக 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் ராஜஸ்தான் அணி 4 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் சேர்த்தது. 

அதன்பின்னர் வேறு வழியின்றி நடராஜனிடம் பந்து ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த ஓவருக்காகவே காத்திருந்தது போல் பட்லர், ஹாட்ரிக் பவுண்டரி உட்பட 4 பவுண்டர்களை விளாசினர். நடராஜனின் முதல் ஓவரிலேயே 17 ரன்களை விளாசி பட்லர் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.  இதனால் 5 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 73 ரன்கள் சேர்த்தது. 

Jos Buttler vs T Natarajan: முழு காணொளியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தொடர்ந்து 20 பந்துகளிலேயே பட்லர் அரைசதம் கடக்க, ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென புரியாமல் திணறினர். ஆனால் ஃபரூக்கி வீசிய பந்தில் பட்லர் 54 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் சேர்த்து, ஐபிஎல்தொடரில் தங்களது அதிகபட்ச பவர்பிளே ரன்னை பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை