ஐபிஎல் 2025: பிளே ஆஃப் போட்டிகளை தவறவிடும் ஜோஷ் ஹேசில்வுட்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனால் ஐபிஎல் தொடரானது மீண்டும் எப்போது தொடங்கும், இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா? அல்லது வேறு நாட்டிற்கு மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்விகள் எழத்தொடங்கின. இந்நிலையில் ஐபிஎல் தொடரானது திட்டமிட்டப்படி அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் இன்றைய தினம் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை அடுத்த வாரம் முதல் தொடகும் வேலைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போட்டிகளை தென் இந்தியாவில் மட்டும் நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும், எஞ்சிய போட்டிகளுக்கான மறு அட்டவணையை பிசிசிஐ கூடிய விரைவில் அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது தங்களுடைய அடுத்த லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கொண்டு இந்த காயம் காரணமாக எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் ஜோஷ் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என்ற தகவல்களும் அதிகரித்துள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியானது ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. தற்போது ஹேசில்வுட் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளை தவறவிடும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றில் ஆர்சிபி அணிக்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
மற்ற அணிகளைப் பற்றிப் பேசுகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரும், டெல்லி கேப்பிட்டால்ஸ் அணியில் விளையாடி வரும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தயாராகும் வகையில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. இது அந்ததந்த அணிகளுக்கு பின்னடவை ஏற்படுத்திவுள்ளது.