எல்லா இடத்திலும் அரசியல் உள்ளது - ஜஸ்டின் லங்கர் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக 2018ஆம் ஆண்டு மே மாதம் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். 2022 ஜூன் மாதம் வரை பதவிக்காலம் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பயிற்சியாளர் பதவியிலிருந்து லாங்கர் திடீரென விலகுவதாக அறிவித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு 2021 டி20 உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தது, ஆஷஸ் கோப்பை வெற்றி என அடுக்கடுக்காக வெற்றிகளை லாங்கர் பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி வென்றபோதிலும் அவர் விலகியது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.
ஆஸ்திரேலிய வீரர்களுடனான உறவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம், முறிவு போன்றவைதான் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகக் காரணம் என்று லாங்கர் முதலில் தெரிவித்தார். ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் லாங்கருக்கு எதிராக செயல்பட்டது தெரிந்தபின் ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹேடன், மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர் லாங்கருக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் ரிச்சார்ட் பிரடின்ஸ்டனுடன் ஏற்பட்ட மோதல், வாக்குவாதம் லாங்கர் பதவி விலகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து லாங்கர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ என்னிடம் ரிச்சார்ட் கூறிய முதல்விஷயம், ஊடகங்களில் உங்களுடைய சக வீரர்கள் அனைவரும் உங்களை ஆதரிக்கிறார்கள் என்பதை முதலில் உங்களை உணர வைக்க வேண்டும்.
அதற்குநான் நான் சொன்னேன், ஆமாம் இடைக்காலத் தலைவரே, அந்த வீரர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மதிப்புக்குரியவர்கள். அவர்கள்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட். உலகக் கிரிக்கெட்டின் பல்வேறு இடங்களில் பணியாற்றுகிறார்கள். எனக்குப்பின் வேறு யாரேனும் வந்தால் மகிழ்ச்சிதான்.
கடந்த 12 ஆண்டுகளில் கடைசி 6 மாதங்கள் எனக்கு மகிழச்சிக்குரியதாக இருந்தது. ஒவ்வொன்றையும் வெல்லஎங்களால் முடிந்து, ஆற்றல் இருந்தது. அதன்மீதுதான் கவனம் செலுத்தினோம். கேடுகெட்ட அ ரசியலைத் தவிர்த்து நான் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். எல்லா இடத்திலும் அரசியல் இருக்கிறது” எனத் லாங்கர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆன்ட்ரூ மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். துணை பயிற்சியாளர்களாக டேனியல் வெட்டோரி, ஆன்ட்ரே ப்ரோவிக், மைக்கேல் டி வென்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்