ஜாம்பவான்களை ஓரம் கட்டிய காகிசோ ரபாடா!

Updated: Tue, Dec 26 2023 22:49 IST
ஜாம்பவான்களை ஓரம்கட்டிய காகிசோ ரபாடா! (Image Source: Google)

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சவாலான பிட்ச்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா 5, நங்கூரமாக விளையாட முயற்சித்த விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சர்துள் தாகூர் 24 ஆகிய 5 வீரர்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கிய ககிசோ ரபாடா முதல் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு நல்ல தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தார். அதனால் தடுமாறி வரும் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேஎல் ராகுல் 70 ரன்கள் எடுத்து களத்தில் போராடி வருகிறார்.

அந்த வகையில் இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்து வீசி வரும் ககிசோ ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 61 போட்டிகளில் 285 விக்கெட்களை எடுத்துள்ளார். குறிப்பாக தம்முடைய கேரியரில் 39.3 என்ற துல்லியமான ஸ்ட்ரைக் ரேட்டில் பந்து வீசி வரும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 200 விக்கெட்டுகளை எடுத்த பவுலர்களில் மிகவும் குறைந்த ஸ்டிரைக் ரேட்டை கொண்டவராக எதிரணிகளை மிரட்டி வருகிறார்.

அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் (42.3) பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் (43.4) வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மால்கம் மார்சல் (46.7) தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்ட் (47.0) ஆகியோரை விட ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஸ்டிரைக் ரேட்டை கொண்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. 

அந்த வகையில் ஜாம்பவான்களை ஓரம் கட்டியுள்ள ரபாடா தம்முடைய பந்துகளை எதிரணி பேட்ஸ்மேன்கள் அவ்வளவு சுலபமாக ரன்கள் அடிக்க முடியாத அளவுக்கு அசத்தி வருகிறார் என்றே சொல்லலாம். அதை விட இப்போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டில் முறையே 285, 158, 58 என மொத்தம் அவர் 504 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த 7ஆவது தென் ஆப்பிரிக்க பவுலர் என்ற அபாரமான சாதனையையும் அவர் படைத்துள்ளார். இத்தனைக்கும் வெறும் 28 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் அதற்குள் 500 விக்கெட்டுகள் எடுத்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அத்துடன் குறைந்தது இன்னும் 9 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஓய்வு பெறுவதற்குள் அவர் 1000 விக்கெட்களை எடுப்பதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை