மீண்டும் காயமடைந்த கேன் வில்லியம்சன்; ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து தங்களின் முதல் 3 போட்டிகளிலும் வென்று ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து புள்ளி அசத்தி வருகிறது. முன்னதாக அந்த அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் கடந்த 2023 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே கேட்ச் பிடிக்கும் போது காயத்தை சந்தித்து வெளியேறியதை மறக்க முடியாது.
குறிப்பாக காலில் காயத்தை சந்தித்த அவர் இந்த உலகக் கோப்பையில் விளையாட மாட்டார் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக 2019 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்று நியூசிலாந்தை ஃபைனல் வரை அழைத்த முக்கிய பங்காற்றிய அவர் காயத்தால் விலகுவார் என்று அறிவிக்கப்பட்டது அந்நாட்டுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
ஆனாலும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்துடன் அறுவை சிகிச்சைக்கு பின் வேகமாக குணமடைந்து பயிற்சிகளை எடுத்த கேன் வில்லியம்சன் இந்த உலகக்கோப்பையில் கேப்டனாக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது. இருப்பினும் முழுமையாக குணமடையாத காரணத்தால் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான விளையாடாத அவர் நேற்று வங்கதேசத்துக்கு எதிராக விளையாடினார்.
சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து தம்முடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 78 ரன்கள் குவித்து நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். ஆனாலும் அப்போது வேகமாக சிங்கள் எடுக்க ஓடிய அவரின் கையில் ஃபீல்டர் ஸ்டம்ப்பை நோக்கி அடித்த பந்து துரதிஷ்டவசமாக பட்டது. அதனால் மேற்கொண்டு விளையாடாமல் பாதியிலேயே வெளியேறிய அவருக்கு இன்று சோதனைகள் நடத்தப்பட்டது.
அதில் அவருடைய ஒரு கை விரல் பெரிய காயத்தை சந்தித்துள்ளதால் அதிலிருந்து குணமடைய ஒரு மாதம் தேவைப்படும் என்று தெரியவந்துள்ளது. அதன் காரணமாக அடுத்ததாக நியூசிலாந்து களமிறங்கும் போட்டிகளில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து நியூசிலாந்து அணியுடன் இணைந்து பயணிக்கும் அவர் விரைவில் குணமடைந்து நாக் அவுட் விளையாடுவார் என்று நம்புவதாக நியூசிலாந்து வாரியம் தெரிவித்துள்ளது.
அதாவது இத்தொடரின் கடைசிக்கட்ட போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. அதனால் ஏற்கனவே காயத்திலிருந்து குணமடைந்த அவர் ஒரு போட்டி முழுமையாக விளையாடுவதற்குள் மீண்டும் இப்படி காயத்தை சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இருப்பினும் அவர் இல்லாமலேயே முதலிரண்டு போட்டிகளில் வென்றது போல் நியூசிலாந்து எஞ்சிய போட்டிகளில் வெற்றிக்கு போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.