விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய கேன் வில்லியம்சன்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணியானது தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 182 ரன்களும், குசல் மென்டிஸ் 106 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 88 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனால் நியூசிலாந்து அணி ஃபாலோ ஆன் ஆனது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்கள் எடுத்த நிலையில் டெவான் கான்வே விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிபார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டாம் பிளெண்டல் 47 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் அறிமுக வீரர் நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 315 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் கேன் வில்லியம்சன் 36 ரன்களைச் சேர்த்த போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 19ஆம் இடத்தை பிடித்துள்ளார். அதன்படி விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8871 ரன்களைச் சேர்த்துள்ள நிலையில், தற்போது கேன் வில்லியம்சன் 8881 ரன்களைச் சேர்த்து அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
தற்போது செயலில் உள்ள வீரர்களில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த வீரர்கள்
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 267 இன்னிங்ஸில் 12,402 ரன்கள்
- ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 195 இன்னிங்ஸில் 9,685 ரன்கள்
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 180 இன்னிங்ஸ்களில் 8,881 ரன்கள்
- விராட் கோலி (இந்தியா) - 193 இன்னிங்ஸில் 8,871 ரன்கள்
- ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை) - 202 இன்னிங்ஸில் 7,940 ரன்கள்