விஜய் ஹசாரே கோப்பை 2024-25: தொடர்ந்து சாதனைகளை குவித்து வரும் கருண் நாயர்!
இந்தியாவின் ஒருநாள் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கர்நாடகா மற்றும் விதர்பா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயரின் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விதர்பா அணி கேப்டன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கு மிகமுக்கிய பங்கினை ஆற்றினார். அதன்படி இப்போட்டியில் 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்த கருண் நாயர் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இத்தொடரில் அவர் அடிக்கும் 6ஆவது அரைசதம் இதுவாகும். மேற்கொண்டு இத்தொடரில் அவர் 7 போட்டிகளில் விளையாடி அதில் 5 சதங்களை விளாசி 752 என்ற சாராசரியில் 752 ரன்களைக் குவித்துள்ளார். இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் ருதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையையும் முறியடித்து கருண் நாயர் படைத்துள்ளார். இதுதவிர்த்து இத்தொடரில் கேப்டனாக 700 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
முன்னதாக இந்த சாதனை 2022-23 சீசனில் 5 இன்னிங்ஸ்களில் 220 சராசரியுடன் 660 ரன்கள் எடுத்த ரிதுராஜ் கெய்க்வாட் பெயரில் இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் ஒரு சீசனில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தமிழ்நாடு அணியின் ஜெகதீஷனின் சதனையை கருண் நாயர் சமன்செய்தும் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணியில் யாஷ் ரத்தோட் 116 ரன்களைய்ம், துருவ் ஷோரே 114 ரன்களையும், கருண் நாயர் 88 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 51 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 380 ரன்களை எடுத்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மஹாராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை மட்டுமே எடுத்தது.
Also Read: Funding To Save Test Cricket
அந்த அணியில் அதிகபட்சமாக அர்ஷின் குல்கர்னி 90 ரன்களும், அங்கித் பவானே 50 ரன்களும், நிகில் நாயக் 49 ரன்களையும் எடுத்தனர். இதன்மூலம் விதர்பா அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் விதர்பா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.