அடுத்தடுத்து சதங்களை விளாசிய கருண் நாயர்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

Updated: Mon, Jan 13 2025 12:48 IST
Image Source: Google

அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தற்போது ஒவ்வொரு இந்திய ரசிகரின் கண்களும் இந்திய அணியின் தேர்வில் உள்ளன. இதற்கிடையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பெயர் கருண் நாயர் என்பது தான். 

ஏனெனில் தற்போது நடந்து வரும் 2024-25 விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் விதர்பா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவதுடன், ஏழு போட்டிகளில் 664 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் இந்திய அணிக்காக கடைசியாக 2017ஆம் ஆண்டு விளையாடிய அவர் தற்போது 7 போட்டிகளில் 5 சதங்களை விளாசி மிரட்டியுள்ளார். 

இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் தமிழக வீரர் ஜெகதீசனுக்கு பிறகு, ஒரு சீசனில் 5 சதங்களை விளாசிய வீரர் எனும் சாதனையும் படைத்துள்ளார். மேற்கொண்டு இந்த சீசனில் அவரது பேட்டிங் சராசரியானது 664 என்ற எண்ணிக்கையில் உள்ளது. உள்ளூர் அணிக்காக கருன் நாயரின் அதிரடியான பேட்டிங், தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது.

மேற்கொண்டு அவர் தற்சமயம் உள்ள ஃபார்மில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புக்ளும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இருப்பினும் தற்போதுள்ள இந்திய அணியில் அவரது தேர்வு சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேசமயம் தற்போது கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியானது பாரோடா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இதைனையடுத்து அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து விதர்பா அணி விளையாடவுள்ளது. இப்போட்டியில் கருண் நாயர் தனது அதிரடியான ஆட்டத்தை தொடரும் பட்சத்தில் நிச்சயம் அவரது தேர்வும் சாத்தியமாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுவரை இந்திய அணிக்காக ஆறு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் கருண் நாயர் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை