ரன் அவுட்டான விப்ராஜ் நிகாம்; வைரலாகும் காவ்யா மாறன் ரியாக்ஷன்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்த நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அஷூதோஷ் சர்மா இணை பொறுப்புடன் விளையாடியதுடன் இருவரும் தலா 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியானது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் விப்ராஜ் நிகம் ரன் அவுட்டான நிலையில் சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் காவ்யா மாறன் கொடுத்த ரியக்ஷன் குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதான்படி இப்போட்டியில் டெல்லி அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - விப்ராஜ் நிகம் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது இன்னிங்ஸின் 13ஆவது ஓவரை ஜீசன் அன்சாரி வீசிய நிலையில் ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் லெக் சைடில் அடித்து விட்டு இரண்டு ரன்களை எடுக்க முயற்சித்தார். முதல் ரன்னை இருவரும் முழுமையாக ஓடிய நிலையில், ஸ்டப்ஸ் இரண்டாவது ரன்னிற்கு முயற்சித்து ஓடினார். ஆனால் மாறுபக்கம் விப்ராஜ் நிகாம் ஸ்டிரைக்கர் திசையிலேயே செய்வதறியாமல் நிற்க ஸ்டப்ஸ் மறுமுனைக்கு சென்றடைந்தார்.
Also Read: LIVE Cricket Score
இதனை சூதாரித்த அனிகெத் வர்மா பந்தை பிடித்த கையோடு ஜீசன் அன்சாரியிடம் த்ரோ அடிக்க, அவர் அதனை பிடித்து ரன் ஆவுட்டாக்கினார். இதனால் 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விப்ராஜ் நிகாம் விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் தான் நிகாமின் விக்கெட் விழுந்தவுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மிகவும் உற்சாகமாக கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.