அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் கேதார் ஜாதவ்!
இந்திய கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுத்த வீரர்களில் ஒருவர் கேதர் ஜாதவ். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 73 ஒருநாள் மற்றும் 09 டி20 போட்டிகளில் விளையாடி 2 சதம், 7 அரைசதங்கள் என 1500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் 27 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் கேதர் ஜாதவ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக 95 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன், 1208 ரன்களைச் சேர்த்துள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கேதர் ஜாதவ், நடப்பு சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் எந்த அணியில் தேர்வாகவில்லை.
இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கேதர் ஜாதவ் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூகவலை தளப்பதிவில் “என்னுடைய தொழில்முறை கிரிக்கெட் பயணத்தில் நீங்கள் வெளிப்படுத்திய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 15:00 மணியில் இருந்து அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் என்னை ஓய்வு பெற்ற வீரராக கருதுங்கள்” என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ள கேதர் ஜாதவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓய்வு முடிவை அறிவித்து கேதர் ஜாதவின் பதிவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.