இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அணிக்கு திரும்பிய வில்லியம்சன்!
நியூசிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த்து.
அந்தவகையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தெலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஜெக்கப் பெத்தெல் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் குழந்தை பிறப்பு காரணமாக ஜேமி ஸ்மித் இத்தொடரில் இருந்து விலகினார். மற்றபடி நட்சத்திர வீரர்கள் அனைவரும் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ளனர்.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் காயம் காரணமாக இந்திய தொடரில் இடம்பிடிக்காமல் இருந்த கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து மீண்டு டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இதன் காரணமாக மார்க் சாப்மேன் டெஸ்ட் அணியில் இருந்து தனது இடத்தை இழந்துள்ளார். மேலும் பென் சீயர்ஸ், கைல் ஜேமிசன் ஆகியோரும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை.
அதேசமயம் இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட அஜாஸ் படேல் மற்றும் இஷ் சோதி ஆகியோரும் இந்த டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மிட்செல் சான்ட்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டும் இடம் கிடைத்துள்ளது. மேற்கொண்டு இந்திய தொடரில் இடம்பிடித்திருந்த பெரும்பாலான வீரர்கள் அனைவரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.
நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (கே), டாம் பிளெண்டல், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில்லியம் ஓ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர் (2வது மற்றும் 3வது டெஸ்ட்), நாதன் ஸ்மித், டிம் சௌதீ, கேன் வில்லியம்சன், வில் யங்.
இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கே), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜாக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
- முதல் டெஸ்ட் போட்டி - நவம்பர் 28 - டிசம்பர் 02 - கிறிஸ்ட்சர்ஜ்
- இரண்டாவது டெஸ்ட் போட்டி - நவம்பர் 06 -10 - வெல்லிங்டன்
- மூன்றாவது டெஸ்ட் போட்டி - நவம்பர் 14-18 - ஹாமில்டன்