சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதனைப் படைத்த கிம் காட்டன்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினராக உள்ள ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான சர்வதேச டி20 போட்டியில் முதல் பெண் கள நடுவராக செயல்பட்டுள்ளார் கிம் காட்டன். இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில்தான் கள நடுவராக அவர் செயல்பட்டுள்ளார்.
தற்போது 48 வயதான அவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 54 மகளிர் டி20 மற்றும் 24 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார். நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த இவர், கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஹாமில்டன் போட்டியில் மூன்றாம் நடுவராக செயல்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் களநடுவராக செயல்பட்டு அசத்தினார். இதன்மூலம் சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில் கள நடுவராக செயல்பட்ட முதல் பெண் நடுவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக இவர், 2018 முதல் மூன்று மகளிர் டி20 உலகக் கோப்பை மற்றும் ஒரு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நடுவராக செயல்பட்டுள்ளார். இதில் 2020, 2022 மற்றும் 2023 இறுதிப் போட்டிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.