கோலி விவகாரத்தில் தேர்வாளர்களை கடுமையாக விளாசிய கீர்த்தி ஆசாத்!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட விவகாரத்தில், தெளிவு கிடைக்காமல் சர்ச்சை நீடிக்கிறது. இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் பலருக்கு அதிருப்தியளித்தது. இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள கோலியை, பிசிசிஐ கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பது பலரது கருத்து.
இதையடுத்து விராட் கோலி - பிசிசிஐ இடையேயான விவகாரம், கருத்து முரண்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய விவாதக்களமாக மாறிய நிலையில், இதுகுறித்து முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான கீர்த்தி ஆசாத் மிகக்கடுமையான கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கீர்த்தி ஆசாத், “கேப்டனை மாற்றும் முடிவு தேர்வாளர்களுடையதுதான் என்றாலும், அதை பிசிசிஐ தலைவரிடம் காட்டி ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தியிருக்க முடியாது. நானும் தேர்வாளராக இருந்திருக்கிறேன். அணி தேர்வு முடிந்ததும், அதை பிசிசிஐ தலைவரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின்னர் தான் அணி அறிவிக்கப்படும்.
எனவே கோலியை கேப்டன்சியிலிருந்து நீக்கும் முடிவை பிசிசிஐ தலைவர் கங்குலியின் ஒப்புதலை பெறாமல் அறிவித்திருக்க முடியாது. எனவே கங்குலியாவது கோலியிடம் முன்கூட்டியே தெரிவித்திருக்கலாம். கோலிக்கு கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வருத்தம் கிடையாது. அதை அவரிடம் தெரியப்படுத்தாதது தான் வருத்தம்.
தற்போதைய அணி தேர்வாளர்கள் மிகச்சிறந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அனைவரும் ஆடிய போட்டிகளின் எண்ணிக்கையை கூட்டினால் கூட, விராட் கோலி ஆடிய போட்டிகளின் எண்ணிக்கையில் பாதி கூட இருக்காது. இதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.