விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது தொடைப்பகுதியில் காயத்தை சந்தித்த கேஎல் ராகுல் அடுத்ததாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் கடந்த நான்கு மாதங்களாகவே எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்த கேஎல் ராகுல் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார். எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக முக்கிய வீரராக பார்க்கப்படும் கேஎல் ராகுல் ஆசிய கோப்பை தொடரில் விளையாடி தனது உடற்பகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் நிரந்தரத்தை இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பிடித்திருந்த அவர், ஒருநாள் உலக கோப்பை அணியிலும் இடம் பெற்றுள்ளார். ஆனால் இந்த ஆசிய கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த கேஎல் ராகுல் தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று கொழும்பு மைதானத்தில் துவங்கிய போட்டியில் பங்கேற்றார். அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணியானது தற்போது மழை குறுக்கீடு வரை 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்துள்ளது. ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் ஆட்டமிழந்த வேலையில் விராட் கோலி 8 ரன்களுடனும், கே எல் ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய கேஎல் ராகுல் 14 ரன்கள் எடுத்திருந்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும் அவர் 53 இன்னிங்ஸ்களில் விளையாடி தற்போது 2,000 ரன்களை சேர்த்துள்ளதால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணிக்காக அதிவேகமாக 2,000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் விராட் கோலியை அவர் இன்று சமன் செய்துள்ளார்.
விராட் கோலியும் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 53ஆவது இன்னிங்ஸ்சில் தான் 2000 ரன்களை கடந்திருந்தார். இந்த பட்டியலில் ஷிகார் தாவான் 48 இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை கடந்து முதலிடத்திலும், நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் 52 இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை கடந்து இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.