ஒருநாள் தொடரில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? - கேஎல் ராகுல் பதில்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்ட நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படவுள்ளார். ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் சிறப்பாக கேப்டன்சி மேற்கொண்டார்.
அதேபோல் இந்த ஒருநாள் அணியில் ரஜத் படிதர், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சஹால், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டிருப்பதால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய கேஎல் ராகுல், “ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே நினைக்கிறேன். உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்களை புதிய இளம் வீரர்கள் நிரப்புவதற்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு கேப்டனாக எந்த அழுத்தத்தையும் இளம் வீரர்களுக்கு அளிக்க விரும்பவில்லை. நாங்கள் விளையாட போகும் தொடரில் தான் எங்களின் கவனம் உள்ளது. உலகக்கோப்பை தொடரில் விளையாடியது கூடுதல் சுவாரஸ்யமாக அமைந்தது. ஆனால் இப்போது தென்னாப்பிரிக்கா ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டுமோ அதற்கான திட்டத்துடன் களமிறங்க வேண்டும்.
டி20 கிரிக்கெட்டில் ரிங்கு சிங் அவரின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். அதனை தொடர்ந்து பார்த்து வருகிறோம். பொறுமையுடன் அவர் விளையாடிய ஆட்டத்தை டிவியில் பார்த்த போதே மகிழ்ச்சியாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் நான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவே களமிறங்கவுள்ளேன். அதேபோல் சஞ்சு சாம்சன் 5 அல்லது 6ஆவது வரிசையில் களமிறங்க வாய்ப்புள்ளது. தொடரின் ஏதேனும் ஒரு கட்டத்தில் விக்கெட் கீப்பிங் செய்ய சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.