ஐபிஎல் 2022: ஆயூஷ் பதோனியை புகழ்ந்த கேஎல் ராகுல்!
15 ஆவது சீசனின் நேற்றைய லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ், 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு, நிதானமாக 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிருத்வி ஷா (61), ரிஷப் பந்த் (39) ரன்கள் எடுத்தனர்.
பிறகு விளையாடிய லக்னோ அணியில், ஓபனர்களாக கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் களம் இறங்கினார்கள். டி காக் துவக்கம் முதலே அதிரடியை காட்ட, கே.எல்.ராகுல் 24 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு வந்த எவின் லூயிஸ் (5), அதிரடியாக ஒரு பக்கம் விளையாடி கொண்டிருந்த டி காக் (80) ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் போட்டி சற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.
கடைசி இரண்டு ஓவர்களில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில், க்ருனால் பாண்டியா 19ஆவது ஓவரில் 13 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடித்தளம் போட்டார். இருந்தாலும் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே தீபக் ஹூடா பெவிலியன் திரும்ப, பிறகு வந்த ஆயுஷ் படோனி இரண்டே பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார்.
இதற்கு பின் பேசிய லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன், கே.எல்.ராகுல், "நாங்கள் அருமையாக விளையாடினோம். ஆனால் பவர்பிளேவில் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. நிச்சயம் அதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அதற்கு பிறகு, பவுலர்கள் எந்த இடத்தில் பந்துவீச வேண்டும் என்பதை முடிவுசெய்து சரியாக பந்துவீசினர். நாங்கள் சூழலை அறிந்து அதற்கு ஏற்றார் போல செயல்பட்டதால் தான் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது.
இந்த தொடரில் பனி முக்கிய பங்காக இருப்பதால் அனைவரும் டாஸ்ஸில் வென்ற பிறகு, பந்துவீசவே ஆசைப்படுகிறார்கள். நிச்சயமாக ஆயூஷ் பதோனி ஏதோ இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவர் அழுத்தமான நேரங்களில் விளையாடும் போதும், அவர் அதை சரியாக கையாளுகிறார். அவர் இன்னும் கற்றுக்கொண்டுமுயற்சியும் செய்து கொண்டிருந்தால், நிச்சயம் உயர்ந்த இடத்திற்கு செல்வார். அவர் மட்டுமல்ல அனைவரின் ஆட்டமும் இன்று அற்புதமாக இருந்தது" என தெரிவித்தார்.