சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் ரவீந்திர ஜடேஜா!
நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து முதலில் விளையாடி அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திரா ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 103 ரன்களையும், ஷுப்மன் கில் 52 ரன்களையும், கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்களையும், கேஎல் ராகுல் 34 ரன்களையும் சேர்த்தனர். இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த விராட் கோலி ஆட்டநயாகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசி.ஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீரருக்கான விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முஷ்பிகுர் ரஹீம் கொடுத்த கேட்ச்சை ஜடேஜா அபாரமாக பிடித்தார். அதனால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் தங்கப்பதக்கத்தை ஜடேஜாவுக்கு அளித்தார்.