அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே திட்டம் - கேஎல் ராகுல்!

Updated: Mon, Dec 12 2022 22:19 IST
K.L Rahul Promises "aggressive Cricket" From India Ahead Of Tests Against Bangladesh (Image Source: Google)

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 14ம் தேதி துவங்க உள்ளது. 

ஒருநாள் தொடரை மிக மோசமாக இழந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரிலாவது வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இதனால் இந்தியா – வங்கதேசம் இடையேயான இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரோஹித் சர்மா, முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்கள் காயம் காரணமாக விலகியதால் நவ்தீப் சைனி போன்ற, அபிமன்யூ ஈஸ்வரன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே போல் காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இடது கை பந்துவீச்சாளரான ஜெயதேவ் உனாட்கட்டிற்கும் வங்கதேச தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரோஹித் சர்மா முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளதால், கேஎல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாகவும், சீனியர் வீரர் புஜாரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி குறித்தான செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விசயங்கள் குறித்து பேசிய கேப்டன் கே.எல் ராகுல், அக்ரோஷமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே தங்களது திட்டம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேஎல் ராகுல் பேசுகையில், “இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டியும் சிறப்பாக இருந்தது. இரண்டு போட்டியையும் நான் பார்த்தேன், டெஸ்ட் போட்டிகள் இது போன்று பரபரப்பாக நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் கொடுக்கும். டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து வீரர்கள் அக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பார்ப்பதற்கும் சிறப்பாக உள்ளது. 

ஆக்ரோஷமான அதிரடி ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியை போன்று ஒவ்வொரு அணிக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுவது டெஸ்ட் போட்டிகளில் மிக அவசியமானது, ஆனால் நிச்சயமாக வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களிடம் இருந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை அனைவரும் எதிர்பார்க்கலாம், இதுவே எங்களது திட்டம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை