தோனியை கண்டதும் கேஎல் ராகுல் செய்த செயல்!

Updated: Sat, Apr 20 2024 13:12 IST
Image Source: Google

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ரஹானே, ஜடேஜா, மொயீன் அலி, எம்எஸ் தோனியின் பொறுப்பான ஆட்டத்தினால் 176 ரன்கள் அடித்தது.

அதிலும் குறிப்பாக கடைசி நேரத்தில் களமிறங்கிய எம்.எஸ். தோனி வெறும் 9 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அணி வலுவான நிலையை எட்ட உதவினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் 82 ரன்களும், டி காக் 54 ரன்களும், பூரன் 23 ரன்களும் அடித்து எளிதான வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இதனால் இப்போட்டியில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனியின் ஆட்டம் மட்டுமே ஆறுதலாக அமைந்தது. அதை விட சென்னை அணிக்கு போட்டி நடக்கும் அனைத்து நகரங்களிலும் தோனிக்கு ரசிகர்கள் உச்சகட்ட வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்போட்டியில் சேப்பாக்கமா அல்லது லக்னோவா என்று யோசிக்கும் அளவுக்கு தோனிக்காக ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து ஆதரவு கொடுத்தனர்.

 

அத்துடன் தோனி பேட்டிங் செய்ய வந்தபோது 124 டெசிபல் சத்தம் பதிவாகும் அளவுக்கு ரசிகர்கள் உச்சகட்ட ஆரவாரம் செய்து வரவேற்பு கொடுத்தனர். இதனால் போட்டி நடைபெறுவது லக்னோவா அல்லது சென்னையா என்ற சந்தேகங்களும் எழுந்தன. மேலும் தோனி களமிறங்கிய தருணம் இது மற்றொரு சென்னையாக மாறிவிட்டது என லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலும் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் போட்டி முடிவுக்கு பின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் மரியாதை கொடுத்துள்ள காணொளி தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி நேற்று ஆட்டம் முடிந்த பின் ருதுராஜிடம் பேசிய பின் தோனியை சந்திக்க வந்த ராகுல், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அணிந்திருந்த தொப்பியை கழட்டி அவருடன் உரையாடலில் ஈடுபட்டார். இக்காணொளி தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை