IND vs SA: காயம் காரணமாக ராகுல், குல்தீப் விலகல்; பந்த் கேப்டன்!

Updated: Wed, Jun 08 2022 22:00 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்த வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களையும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

அதன்படி பிசிசிஐ வெளியிட்டிருந்த இந்த அணியில் ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடிவரும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இளம்வீரரான கே.எல் ராகுல் இந்திய அணியை தலைமை தாங்கி வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ராகுல் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியையும் பி.சி.சி.ஐ வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தொடரானது நாளை ஜூன் 9ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்க உள்ள நிலையில் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக இத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்ட கே.எல் ராகுல் கடைசி நேரத்தில் திடீரென காயம் காரணமாக விலகியுள்ளார் என்பதனால் தற்போது இந்திய அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை பெற்றிருக்கும் இந்திய அணியானது நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் 13 ஆவது வெற்றியை தொடர்ச்சியாக பெற்று வரலாறு படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய இந்திய அணியின் கேப்டனும் துவக்க ஆட்டக்காரருமான கே.எல் ராகுல் அணியில் இருந்து வெளியேறியுள்ளதால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படக்கூடிய மாற்றத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இது ஒருபுறம், படி கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் பார்ம் அவுட் காரணமாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த குல்தீப் யாதவ் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தியதன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் இன்று அவரும் காயமடைந்து தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்த அவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொள்வார்கள் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை