டி20 உலகக்கோப்பையில் தவானுக்கு வாய்ப்பு கடினம் தான் - அஜித் அகர்கர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர் கரோனா பரவல் காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடருக்காக தயாராகும் பணிகளில் பிசிசிஐ தற்போது இருந்தே தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதன்படி வீரர்களின் ஃபார்மை தெரிந்துக்கொள்ள ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகளை உருவாக்கி இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் அனுப்பியுள்ளது.
சீனியர் வீரர்கள் இங்கிலாந்திலும், ஐபிஎல் கலக்கிய இளம் வீரர்கள் இலங்கை சுற்றுப்பயணத்திலும் பங்குபெற்றுள்ளனர். இந்த இரு தொடர்களுமே டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வில் முக்கிய பங்காற்றவிருக்கிறது.
ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார் ஆகியோர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். எனவே இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 6 போட்டிகளிலும் தவான் சிறப்பாக செயல்பட்டாலும், உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான் என முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ஓப்பனிங் இடத்தை பிடிப்பது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. இந்தியாவின் ஓப்பனிங்கிற்கு ரோகித் சர்மா முதல் ஓப்பனர் என்பது உறுதியான ஒன்று. மற்றொரு ஓப்பனிங் இடத்திற்கு தவானை விட கே.எல்.ராகுல் முதன்மை தேர்வாக உள்ளார். டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் 140 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஆனால் தவான் 127 மட்டுமே வைத்துள்ளார்.
ஷிகர் தவான் இலங்கை தொடரில் முடிந்த அளவிற்கு அதிக ஸ்கோரை அடிக்க வேண்டும். அது ராகுல் மற்றும் ரோகித்தின் மீது அழுத்தத்தை கொடுக்கும். அப்படி அழுத்தம் ஏற்பட்டு சொதப்பினால் தவானுக்கு வாய்ப்புண்டு. ஒரு வீரராக அவரால் அதனை மட்டுமே செய்ய முடியும். இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரும் டி20 உலகக்கோப்பையில் இடம்பெற முக்கிய தொடராக இருக்கும் என்பதால் அதிலும் தவானின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.