மயங்க் யாதவின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது - கேஎல் ராகுல்!

Updated: Wed, Apr 03 2024 13:31 IST
மயங்க் யாதவின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது - கேஎல் ராகுல்! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்பொட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 81 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களையும் சேர்த்தனர். ஆர்சிபி அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 20 ரன்களுக்கும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 19 ரன்களுக்கு, ராஜத் பட்டிதார் 29 ரன்களுக்கும், மஹிபால் லாம்ரோர் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறினர். 

இதனால் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிகுறித்து பேசிய கேஎல் ராகுல், “ஒரு அணியாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இந்த பிட்ச் சற்று குழப்பாக இருந்தது. ஏனெனில் இங்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியகரமாக இருந்தது. இப்போட்டியில் எங்களது தொடக்கம் சிறப்பாக அமைந்தது, அதிலும் குயின்டன் டி காக் மிகச்சிறப்பான தொடக்கத்தை வழங்கினார். அதிலும் குறிப்பாக இப்போட்டியின் இறுதிக்கட்டத்தில் நாங்கள் 10 முதல் 15 ரன்களை கூடுதலாகவே எடுக்க நினைத்தோம், ஆனால் ஆர்சிபி வீரர்கள் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு எங்களை கட்டுப்படுத்தினர்.

எங்கள் அணி பந்துவீச்சாளர்களும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளனர். இங்கு சின்னசாமி மைதானத்தைப் பொறுத்தவரையில் ஒரு ஓவரில் நீங்கள் இரண்டு பவுண்டரி அல்லது சிக்சர்களை விளாசினாலே ஆட்டத்தின் மொத்த அழுத்தமும் எதிரணி மீது விழுவதுடன், அது ஆட்டத்தின் போக்கையும் மொத்தமாக மாற்றிவிடும். இதனால் இந்த பிட்சைப் பொருத்தவரையில் நீங்கள் பொறுமையாகவும், உங்கள் அணி வீரர்கள் மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போட்டியில் மயங்க் யாதவின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது.

இவ்வளவு இளம் வயதில் தொடர்ச்சியாக 155 கிமீ வேகத்தில் பந்துவீசுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. குறிப்பாக மயங்க் யாதவ் பந்துவீசுவதை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பார்க்கும்போது அற்புதமாக இருக்கிறது. உண்மையிலேயே அவரது வேகத்தில் கீப்பிங் செய்வது சற்று கடினமாகவே உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளாகவே அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த ஆண்டே அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாட வேண்டியது. ஆனால் காயம் காரணமாக அதை தவறவிட்ட அவர் தற்போது மீண்டும் மிக சிறப்பாக தயாராகி வந்துள்ளார்.

இப்போட்டியில் நல்ல விஷயம் என்னவெனில் அது நான் டாஸை இழந்தது தான். ஏனெனில் ஒருவேளை இப்போட்டியில் நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, அப்போது எதிராணி வீரர்கள் கடினமாக இலக்கை நிர்ணயித்திருந்தால் அது எங்களது வெற்றியை கேள்விக்குறியாக்கிருக்கும். ஆனால் நாங்கள் போட்டியில் தோல்வியடைவது குறித்து பெரிதாக வருத்தம் கொள்ளப்போவதில்லை. குறிப்பாக முதல் போட்டியில் நாங்கள் அடைந்த தோல்விக்கு பிறகு, தீவிரமாக தயாராகி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளோம் . இதனைதான் நாங்கள் தொடர்ந்து செய்ய விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை