முதல் தர கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய தேஷ்பாண்டே, கோட்யான்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடபாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று வரும் இரண்டாவது காலிறுதிச்சுற்று போட்டியில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது முஷீர் கானின் அபாரமான இரட்டைச் சதத்தின் மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 384 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பரோடா அணியில் ஷஸ்வாத் ராவத் மற்றும் கேப்டன் விஷ்ணு சோலங்கி ஆகியோரது சதத்தின் மூலமாக அந்த அணியின் முதல் இன்னிங்ஸில் 348 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 32 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர் ஹர்திக் தோமர் சதமடித்த அசத்தினாலும், மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதிலும் குறிப்பாக முஷீர் கான் 33, பிரித்வி ஷா 87, சாம்ஸ் முலானி 54 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்று வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணி 337 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனைத்தொடர்ந்து கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே - தனுஷ் கோட்யான் இணை யாரும் எதிர்பாராத ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இதில் 10ஆவது மற்றும் 11ஆவது வீரர்களாக களமிறங்கிய இருவரும் சதமடித்து சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதில் துஷார் தேஷ்பாண்டே 10 பவுண்டரி, 8 சிச்கர்களை விளாசி 123 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் ஆட்டமிழக்காமல் இருந்த தனுஷ் கோட்யான் 10 பவுண்டரி, 4 சிச்கர்களை விளாசி 120 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 569 ரன்களை குவித்ததுடன், பரோடா அணிக்கு வெற்றி இலக்காக 606 ரன்களையும் நிர்ணயித்தது. இந்நிலையில் இப்போட்டியில் மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே - தனுஷ் கோட்யான் இருவரும் இணைந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போட்டியில் இருவரும் சதமடித்து அசத்தியதன் மூலம் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 10ஆவது மற்றும் 11ஆவது பேட்டர் இருவரும் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும் இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டிற்கு 232 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன்மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் கடைசி விக்கெட்டிற்கு பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்தது. முன்னதாக 1991 -92ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை சீசனில் மும்பை அணிக்கு எதிராக டெல்லி அணியில் அஜய் சர்மா -மணிந்தர் சர்மா ஆகியோர் இணைந்து 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.