முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய அணியில் கிராந்தி கௌத் சேர்ப்பு!
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியை லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கான பதிலடியை தென் ஆப்பிரிக்க அணி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த முத்தரப்பு தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த காஷ்வி கௌதம் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இத்தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் காஷ்வி கௌதம் விளையாடிய நிலையில், 5 ஓவர்களை மட்டுமே வீசிய கையோடு காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் காயம் தீவிரமடைந்ததை தொடர்ந்து எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து காஷ்வி கௌதம் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடரில் இருந்து விலகிய காஷ்வி கௌதமிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் கிராந்தி கௌத் மற்று வீராங்கனையாக இந்திய மகளிர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக்கில் யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி கிராந்தி கௌத், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்டுகள் உட்பட இத்தொடரில் மொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் உள்ளூர் போட்டிகளில் மத்தியப் பிரதேச அணிக்காக விளையாடிய சீனியர் மகளிர் ஒருநாள் கோப்பையில், ஒன்பது இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிர் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், கிராந்தி கௌத்*, சினே ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசாப்னிஸ், ஸ்ரீ சரணி, சுசி உபாத்யாய்