பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் - குல்தீப் யாதவ்!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்றின் முக்கிய ஆட்டமானது நேற்று ரிசர்வ் டே நாளில் நடைபெற்று முடிந்தது. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்கள் குவித்து அசத்தியது.
பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி பாகிஸ்தான் அணியானது துவக்கத்திலிருந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக அந்த அணி 100 ரன்களுக்குள்ளே 5 விக்கெட்டுகளை இழந்ததோடு அடுத்த 30 ரன்களுக்குள் மீதமுள்ள அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியாக பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் இந்த போட்டியில் தான் பந்துவீசிய விதம் குறித்து பேசிய குல்தீப் யாதவ், “இந்த போட்டியில் நான் சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஒன்றரை வருஷமாக மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறேன். இதற்கெல்லாம் காரணம் என்னுடைய பவுலிங் லைனில் உள்ள லென்ந்த் மற்றும் ரிதத்தை சரி செய்தது தான். எப்பொழுதுமே ஒருநாள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி ஐந்து விக்கெட் வீழ்த்துவது என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விசயம்.
அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி இருக்கிறேன் எனவே அவர்களது ஸ்ட்ரென்த் என்ன என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் நான் என்னுடைய பவுலிங் ஸ்கில் மற்றும் என்னுடைய பந்துவீச்சில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். அதனால் தான் விக்கெட்டுகள் கிடைத்தது” என கூறியுள்ளார்.