இர்ஃபான் பதான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் குல்தீப் யாதவ்!

Updated: Mon, Feb 03 2025 23:05 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. 

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார். முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணியில் இடம்பிடித்திருந்த குல்தீப் யாதவ் அதன்பின் காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி இருந்தார்.

இதனையடுத்து அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார். அதேசமயம் எதிர்வரும் சம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இத்தொடரின் மூலம் குல்தீப் யாதவ் சிறப்பு சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். 

அதன்படி இத்தொடரில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானை முந்தும் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக இர்ஃபான் பதான் 120 போட்டிகளில் 173 விக்கெட்டுகளை வீழ்த்தி 10ஆம் இடத்தில் உள்ள நிலையில், குல்தீப் யாதவ் 106 ஒருநாள் போட்டிகளில் 172 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்த இடத்தில் உள்ளார். 

மேற்கொண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே 269 போட்டிகளில் விளையாடி 334 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தடுத்த இடங்கலில் ஜவாகல் ஸ்ரீநாத், அஜித் அகர்கர், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் மற்றும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் குல்தீப் யாதவ் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 159 போட்டிகளில் 166 இன்னிங்ஸ்களில் 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் குல்தீப் யாதவ் மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இர்பான் பதானை முந்தி 12ஆவது இடத்தைப் பிடிப்பார். இர்ஃபான் பதான் சர்வதேச கிரிக்கெட்டில் 173 போட்டிகளில் 195 இன்னிங்ஸ்களில் விளையாடி 301 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஸ் பட்லர், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத், மார்க் வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை