திலஷன் சாதனையை முறியடித்த குசால் பெரேரா!

Updated: Sun, Nov 10 2024 10:13 IST
Image Source: Google

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகல் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

அந்தவகையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஸகாரி ஃபோல்க்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 27 ரன்களையும், வில் யங் 19 ரன்களையும், மிட்செல் சான்ட்னர் 16 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர். 

இதன்மூலம் நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரானா, வநிந்து ஹசரங்கா, நுவான் துஷாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் பதும் நிஷங்கா 19 ரன்களையும், குசால் பெரேரா 23 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 23 ரன்களையும், வநிந்து ஹசரங்கா 22 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சரித் அசலங்கா 35 ரன்களையும், துனித் வெல்லாலகே 11 ரன்களையும் சேர்த்ததன் மூலம் இலங்கை அணி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்தை வீழ்த்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணி வீரர் குசால் பெரேரா 23 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்தவகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக இருந்த திலகரத்னே தில்ஷானை பின்னுக்கு தள்ளி குசால் பெரேரா அந்த பட்டியலில் தற்போது முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்படி தில்ஷான் 80 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 13 அரைசதங்கள் என 1889 ரன்களைக் குவித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இந்நிலையில் குசால் பெரேரா 73 போட்டிகளில் 15 அரைசதங்களுடன் 1904 ரன்களைக் குவித்து தற்சமயம் புதிய சாதனையைப் படைத்துள்ளார். அதேசமயம் இந்த பட்டியலில் குசால் மெண்டிஸ் 74 போட்டிகளில் 1840 ரன்களைச் சேர்த்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை