PSL 2023: இஸ்லாமாபாத்தை பந்தாடியது லாகூர்!

Updated: Tue, Feb 28 2023 10:32 IST
Lahore Qalandars' Thrash Islamabad United By 110 Runs With An All-Round Performance (Image Source: Google)

பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. அதன்படி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

இதையடுத்து களிறங்கிய லாகூர் அணிக்கு ஃபகர் ஸமான்  - மிர்ஸா தாஹிர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மிர்ஸா தாஹிர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, ஃபகர் ஸமான் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அப்துள்ளா ஷஃபிக் - சாம் பில்லிங்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கல் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபுதுல்லா ஷஃபிக் 45 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் சிக்கந்தர் ரஸா - ரஷித் கான் இணை அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் டாம் கரண் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் தொடக்க வீரர்கள் காலின் முன்ரோ 18 ரன்னிலும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ரஸ்ஸி வெண்டர் டூசென், சதாப் கான், அசாம் கான், அசிஃப் அலி, ஃபஹிம் அஸ்ரஃப் என அதிரடி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் வந்த டாம் கரண், ஹசன் அலி என அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 13.5 ஓவர்களிலேயே இஸ்லாமாபாத் யுனைடெட் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லாகூர் தரப்பில் டேவிட் வைஸ் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான், சிக்கந்தர் ரஸா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை