லலித் மோடி என் கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டினார் - பிரவீன் குமார்!

Updated: Tue, Jan 09 2024 13:20 IST
லலித் மோடி என் கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டினார் - பிரவீன் குமார்! (Image Source: Google)

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார். இவர் இந்திய அணிக்காக 2007 – 2012 வரையிலான காலகட்டங்களில் 6 டெஸ்ட் மற்றும் 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 77 விக்கெட்களையும் எடுத்த அவர், 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற சிபி முத்தரப்பு கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். 

இதன் காரணமாக 2011 உலகக் கோப்பையிலும் விளையாடுவதற்கு தேர்வான அவர் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறியதால் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டார். அதன் பின் காயத்தால் தடுமாறிய அவர் ஐபிஎல் தொடரிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். அதனால் 2012க்குப்பின் புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு கொடுத்த அப்போதைய கேப்டன் தோனி இவரை கண்டுகொள்ளவில்லை.

அதை தொடர்ந்து 2018இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.இந்நிலையில் ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய தாம் முதலில் டெல்லி அணிக்காக விளையாட விரும்பியதாக பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போதைய ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி பெங்களூரு அணிக்காக விளையாடாமல் போனால் கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டியதாக பிரவீன் குமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “பெங்களூரு அணிக்காக நான் விளையாட விரும்பவில்லை. ஏனெனில் பெங்களூரு என்னுடைய ஊரிலிருந்து மிகவும் தொலைவில் இருக்கிறது. மேலும் எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது என்பதுடன் அங்குள்ள உணவுகள் அதிகம் பிடிக்காது. மறுபுறம் மீரட்டுக்கு மிகவும் அருகில் டெல்லி இருந்தது. எனவே அந்த அணிக்காக விளையாடினால் நாம் சமயம் கிடைக்கும் போது வீட்டுக்கு சென்று வரலாம் என்ற ஆர்வத்துடன் இருந்தேன். 

ஆனால் ஒரு நபர் என்னை வலுக்கட்டாயமாக பெங்களூரு அணியின் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வைத்தார். முதலில் அது ஒப்பந்தம் என்பதே எனக்கு தெரியாது அவர்களிடம் நான் பெங்களூரு அணிக்காக அல்ல டெல்லிக்காக விளையாட விரும்புவதாக சொன்னேன். ஆனால் லலித் மோடி என்னை அழைத்து கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டினார்” என திடுக்கிடும் தகவலை கூறி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை