கேப்டனாக செயல்படும்போது அணிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் - ஷுப்மன் கில்!
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலமானது எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.
அந்த வகையில் 10 ஐபிஎல் அணிகளுமே தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது குஜராத் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில்லை அறிவித்துள்ளது.
முன்னதாக ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி 22 வயதில் பொறுப்பேற்ற நிலையில், குஜராத் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் 24 வயதில் பொறுப்புக்கு வந்துள்ளார். இதனால் ஷுப்மன் கில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரின் கேப்டன்சி எப்படி இருக்கும், சீனியர் வீரர்களை எப்படி அணுகுவார், அழுத்தத்தை எப்படி சமாளிப்பார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஷுப்மன் கில் கேப்டன்சி குறித்து பேசுகையில், “ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது எனக்கு 7 வயது இருக்கும். குழந்தையாக இருந்து ஐபிஎல் தொடர் பார்த்து வளர்ந்த எனக்கு, கிரிக்கெட்டர் ஆக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. அதிலும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும், அணிக்கு தலைமையேற்க வேண்டும் என்பதெல்லாம் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொருவருக்கும் கனவாக தான் இருந்திருக்கும்.
என்னை பொறுத்தவரை கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் போது நமக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துவிடும். அர்ப்பணிப்பு, கட்டுப்பாடுடன் இருந்து கடின உழைப்பை கொடுக்க வேண்டும். முக்கியமாக அணிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும். நேர்மையான இருக்க வேண்டும் இதெல்லாம் கேப்டனுக்கான தேவைகள் தான். நான் மிகச்சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறேன்.
அவர்களிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். அந்த கற்றல் அனுபவம் ஐபிஎல் தொடரில் எனக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல் குஜராத் அணியில் ஏராளமான கேப்டன்கள் இருக்கிறார்கள். கேன் வில்லியம்சன், ரஷீத் கான், முகமது ஷமி, டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இதனால் ஏராளமானவற்றை கற்க முடியும் என்று ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.