இந்தியாவை வீழ்த்தி இந்த அணி கோப்பையை வெல்லும் - ஆடம் கில்கிறிஸ்ட் கணிப்பு!

Updated: Thu, Oct 05 2023 13:55 IST
Image Source: Google

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐசிசி 2023 உலகக்கோப்பை இன்று இந்தியாவில் கோலாகலமாக தொடங்கியது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக வரலாற்றில் முதல் முறையாக இந்திய மண்ணில் முழுவதுமாக ஐசிசி நடத்தும் இத்தொடரில் டாப் 10 அணிகள் நவம்பர் 19ஆம் தேதி வரை மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வலுவான ஆஸ்திரேலியா போன்ற உலக அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சொல்லப்போனால் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்திய அணியினர் களமிறங்குகின்றனர்.

அதற்கேற்றார் போல் 2023 ஆசிய கோப்பையை 8ஆவது முறையாக வென்ற இந்திய அணி சமீபத்திய ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. மேலும் ரோஹித் சர்மா, கில் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் ராகுல், பும்ரா போன்ற காயத்தை சந்தித்த வீரர்கள் குணமடைந்து சிறப்பாக செயல்பட்டு வருவது இந்திய அணியை வலுப்படுத்துகிறது.

அதன் காரணமாக இந்தியாவை தோற்கடித்து விட்டு தான் உலகின் மற்ற அணிகள் இந்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று ஏராளமான முன்னாள் வீரர்கள் கடந்த ஒரு மாதமாக கணித்து வருகிறார்கள். இந்நிலையில் 2023 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு இந்தியா வரும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். ஆனால் இறுதிப்போட்டியில் நிச்சயமாக இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஆடவர் உலகக்கோப்பை துவங்கும் மாலை அன்று அனைத்து அணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகக்கோப்பையில் எனக்கு நிறைய மலரும் நினைவுகள் இருக்கின்றது. என்னைப் பொறுத்த வரை இந்த உலகக் கோப்பையில் இந்தியாவை ஃபைனலில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும். உங்களுடைய கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை