அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!

Updated: Thu, Jul 20 2023 21:10 IST
அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை - ஏபிடி வில்லியர்ஸ் (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2ஆவது போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்து விளையாடி வருகிறது. 

பொதுவாக கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களை ஆங்கிலத்தில் கோட் அதாவது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று ரசிகர்களும் வல்லுனர்களும் பாராட்டுவார்கள். அந்த வகையில் தம்மையும் நிறைய தருணங்களில் திணறடித்த திறமையை கொண்டுள்ள அஸ்வின் அவ்வாறு அழைப்பதற்கு தகுதியானவர் என்று தென் ஆபிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ஆனாலும் அதற்கு 500 – 600 போன்ற இன்னும் சற்று அதிகமான விக்கெட்டுகளை எடுத்து சாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் எப்போதுமே அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை என்றும் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அந்த போட்டியில் வெறும் ஓரிரு மணி நேரங்கள் மட்டுமல்லாமல் மொத்தமாக அவர் நம்ப முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு 12/131 என்ற சிறப்பான பந்து வீச்சை பதிவு செய்தார். நானும் அவரை நிறைய போட்டிகளில் எதிர்கொண்டுள்ளேன். அதில் என்னை அவர் திணறடித்து கவரும் வகையில் செயல்பட்டார்.

மேலும் காலத்திற்கேற்றார் போல் தன்னுடைய திறமையையும் ஆட்டத்தையும் மெருகேற்றியுள்ள அவர் இடது மற்றும் வலது ஆகிய 2 வகையான பேட்ஸ்மேன்களையும் கச்சிதமாக விளையாட விடுவதில்லை. இது அவரை ஆல் டைம் கிரேட்டஸ்ட் வீரர்களின் பட்டியலில் சேர்ப்பதற்கு தகுதியான ஒன்றாக காட்டுகிறது. இருப்பினும் அவரை இன்னும் சில விக்கெட்டுகளை எடுக்க விடுங்கள். பின்னர் நிச்சயமாக கோட் என்று அனைவரும் அழைப்போம். மிகச் சிறப்பான பவுலரான அவர் இந்தியாவின் மேட்ச் வின்னர்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை