SA20 League: பரபரப்பான ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Sun, Jan 22 2023 11:49 IST
Leus du Plooy scored an unbeaten 47 to help JSK win a last-over thriller against SEC by five wick (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ஈஸ்டர்ன் கேப் அணியில் ஜோர்டன் ஹார்மன், சரேல் எர்வீ, கேப்டன் ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் என அதிரடி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதேசமயம் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆடம் ரோஸிங்டன் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த மார்கோ ஜான்செனும் 6 ரன்கள் எடுத்த நிலையில் அரோன் பங்கிசோ பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த் ஜேஜே ஸ்மட்ஸ் - ஜோம்ஸ் ஃபுல்லர் இணை ஓரளவு அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 22 ரன்கள் சேர்த்திருந்த ஸ்மட்ஸும் பங்கிசோ பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பிரைடன் கார்ஸும் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஜேம்ஸ் ஃபுல்லரும் 27 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆரோன் பங்கிசோ, கோட்ஸி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் பேட்டர்கள் சொதப்பினர். தொடக்க வீரர் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், நெய்ல் பிராண்ட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் - டூ ப்ளூய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

பின் 37 ரன்களில் டூ பிளெசிஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மாகான்யா, ஃபெரீரா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த டூ ப்ளூய் 47 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆரோன் பங்கிஸோ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியளில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை